பிரதமர் மோடியின் திருக்குறள் பதிவுக்கு முதல்வர், துணை முதல்வர் பாராட்டு

Webdunia
வெள்ளி, 17 ஜூலை 2020 (07:21 IST)
modi ops eps
நேற்று பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் திருக்குறளின் பெருமையை குறிப்பிட்டு மூன்று டுவிட்டுக்களை பதிவு செய்தார். அதில் இரண்டு டுவிட்டுக்கள் தமிழிலும் ஒன்று ஆங்கிலத்திலும் இருந்தது. திடீரென பிரதமர் மோடி திருக்குறள் குறித்து பதிவு செய்த டுவிட், தமிழர்களை பெருமையடைய செய்துள்ளது
 
இந்த நிலையில் மோடியின் திருக்குறள் டுவிட்டுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இதற்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து முதல்வர் பழனிசாமி கூறியதாவது: 
 
உலகப் பொதுமறையாம் திருக்குறள் ஒரு நீதி நூல் மட்டுமின்றி, வாழ்வியல் நூலாகவும் திகழ்கின்றது.‌ இனம், மொழி, நாடு போன்ற எல்லைகளைக் கடந்து அனைத்து தரப்பு மக்களின் வாழ்வினை நெறிப்படுத்தும் உயரிய நூலாகும். உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களில் தெய்வப் புலவர் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளும் ஒன்றாகும். இத்தகைய சிறப்புமிக்க திருக்குறளை இந்தியா முழுவதுமுள்ள இளைஞர்கள் படித்து பயன்பெற வேண்டும் என்று பிரதமர் அவர்கள் கூறியிருப்பது தமிழுக்கும், தமிழருக்கும் பெருமை சேர்ப்பதாகும்.
 
இதுகுறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது: உலகப் பொதுமறையாம் திருக்குறளின் சிறப்பை மேற்கோள் காட்டிய மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களுக்கு எனது சார்பாகவும், உலகத் தமிழர்கள் அனைவர் சார்பாகவும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். திருக்குறளின் இப்பெருமைகளை எல்லாம் பாரதப் பிரதமர் அவர்களின் வாய்மொழியாக கேட்கும் போது தமிழ்மக்களின் இதயங்கள் பூரிப்பில் பொங்கி வழிகின்றன. இனம், மொழி, மத பேதங்கள் கடந்து உலக மாந்தர் அனைவருக்கும் பொருந்தும் வகையில் மானிட வாழ்விற்கான அறம், பொருள், இன்பத்தை விளக்கி கூறும் திருவள்ளுவப் பெருமானின் பெருமையை புகழ்ந்துரைத்தும் வள்ளுவ நெறியில் இந்த வையகம் வாழ்வு பெற வேண்டும் என்றும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருப்பதைக் கண்டு சொல்லொணா பெருமையும் மகிழ்ச்சியும் அடைந்தேன் என்று கூறியுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்