போக்குவரத்து ஊழியர்களுக்கு நீதிமன்றம் மீண்டும் எச்சரிக்கை - போராட்டம் முடிவிற்கு வருமா?

Webdunia
திங்கள், 8 ஜனவரி 2018 (12:24 IST)
தமிழக போக்குவரத்து ஊழியர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என சென்னை நீதிமன்றம் மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.


ஊதிய உயர்வு, நிலுவைத் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக போக்குவரத்து துறை ஊழியர்கள் கடந்த 5 நாட்களாக பணிக்கு செல்லாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 
 
போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும். இல்லையேல் நடவடிக்கை பாயும் என நீதிமன்றம் மற்றும் அமைச்சர் விஜய பாஸ்கர் ஆகியோர் எச்சரித்தும் 5 நாளாக இன்று போராட்டம் தொடர்கிறது.
 
அந்நிலையில், இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று காலை சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடங்கியது. அப்போது, தமிழக அரசுக்கும், போக்குவரத்து தொழிலாளர் சங்கங்களுக்கும் பல வேள்விகளை எழுப்பிய நீதிமன்றம், போக்குவரத்து ஊழியர்களிடம் பிடித்தம் செய்த நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், ஓய்வூதியம், பணிக்கொடையை ஆகியவற்றை வழங்காதது ஏன்? ஏன் காலதாமதம்? போக்குவரத்து துறையை நடத்த முடியாவிட்டால் அதை தனியார் வசம் ஒப்படைக்க வேண்டியதுதானே? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

 
அதன் பின் மீண்டும் விசாரணை நடைபெற்றது. அப்போது, அமைச்சர்தான் போராட்டம் செய்கிறார். நாங்கள் போராடவில்லை. எனவே  போராட்டத்தை நடத்தக்கூடாது என விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என ஊழியர்கள் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். ஆனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதால் தடையை நீக்க முடியாது. முன்னறிவிப்பில்லாத போராட்டத்தை ஏற்க முடியாது என நீதிபதிகள் கூறிவிட்டனர். 
 
அதோடு, நோட்டீஸ் அனுப்பிய பின்பே ஊழியர்கள்  மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை விட்டு உடனடியாக பணிக்கு திரும்பவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்