புதிய ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததால், கடந்த 4ம் தேதி மாலை முதல் தமிழக போக்குவரத்து ஊழியர்கள் தமிழகம் முழுவதும் பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், 90 சதவீத பேருந்துகள் இயக்கப்படவில்லை.
போராட்டத்தை கைவிட்டு பணியாளர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும். இல்லையேல் அவர்கள் மீது நடவடிக்க எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும், அதை ஏற்க போக்குவரத்து ஊழியர் சங்க நிர்வாகிகள் மறுத்துவிட்டனர். வரும் திங்கட்கிழமை நீதிமன்றத்தை நாடவுள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர். இந்த வேலை நிறுத்தம் காரணமாக பணிக்கு செல்பவர்கள், வெளியூர் செல்பவர்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, தினக்கூலி அடிப்படையில், அரசு பேருந்துகளை இயக்க தற்காலிக ஊழியர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கரூரில் பேட்டியளித்த அமைச்சர் விஜய பாஸ்கர் “தற்போது தமிழகமெங்கும் 80 சதவீத பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நாளை முதல் 100 சதவீத பேருந்துகளும் இயக்கப்படும். எனவே, நாளைக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் ஊழியர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என பேட்டியளித்துள்ளார்.