ரெமோ படத்திற்கு வழங்கப்பட்ட வரிச்சலுகையை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றதில் தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக, தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ரெமோ. இப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் வெற்றி விழா மேடையில், தன்னை சிலர் தொந்தரவு செய்வதாக அழுதார். அந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இப்படத்திற்கு தமிழக அரசு வழங்கிய வரிச்சலுகையை ரத்து செய்ய வேண்டும் என சென்னையை சேர்ந்த வரதராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது :
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘ரெமோ’ படத்தை கடந்த 7–ந்தேதி பார்ப்பதற்கு சென்னையில் உள்ள பிரபல தியேட்டரில் ஒன்றில் டிக்கெட் முன்பதிவு செய்தேன். அப்போது என்னிடம் ரூ.120 வசூலிக்கப்பட்டது. இந்த டிக்கெட் வாங்கிய பின்னர்தான், இந்த படத்துக்கு தமிழக அரசு வரிச்சலுகை வழங்கியிருப்பது எனக்கு தெரியவந்தது.
தமிழ் மொழியையும், தமிழ் சினிமாவையும் ஊக்குவிக்கும் விதமாக பல சலுகைகளை தமிழக அரசு கடந்த 2005–2007–ம் ஆண்டுகளில் அறிவித்தது. அதன்படி, தமிழிலேயே பெயர் சூட்டப்படும் புதிய திரைப்படங்களுக்கு முழுமையான வரிவிலக்கை தமிழக அரசு அளித்து வருகிறது.
ஆனால், ‘ரெமோ’ என்ற வார்த்தை தமிழ் வார்த்தையே இல்லை. இது ஒரு லத்தீன் வார்த்தையாகும். ஆனால், இது தமிழ் வார்த்தை என்று கூறி வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளது. தமிழக வணிகவரித்துறையின் முதன்மை செயலாளராக இருக்கும் சி.சந்திரமவுலிதான், அதே துறையின் கூடுதல் தலைமை செயலாளராகவும் உள்ளார். இரு பதவிகளையும் அவரே வகிப்பதால், ‘ரெமோ’ என்ற வார்த்தை தமிழ் இல்லை என்று நன்கு தெரிந்து இருந்தும், இந்த திரைப்படத்துக்கு வரிச்சலுகையை வழங்கியுள்ளார். அவர் தன் பதவியை தவறாக பயன்படுத்தியுள்ளார்.
இதனால், வரியாக மக்களிடம் இருந்து வசூலிக்கப்படும், பெரும்தொகை அரசுக்கு செல்லாமல், இந்த படத்தின் தயாரிப்பாளருக்கு செல்கிறது. இதை உடனடியாக தடுத்து நிறுத்தவேண்டும்.
‘ரெமோ’ படத்துக்கு வரிச்சலுகை வழங்கி, தமிழக வணிகவரித்துறை முதன்மை செயலாளர் கடந்த 6–ந்தேதி பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்கவேண்டும். இந்த அரசாணையை ரத்து செய்யவேண்டும்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதை விசாரித்த நீதிபதி, இதுபற்றி பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.