தண்டவாளத்தில் பாறாங்கல்; சென்னை ரயிலை கவிழ்க்க சதி? – ஆம்பூர் அருகே பரபரப்பு!

Webdunia
ஞாயிறு, 25 ஜூன் 2023 (10:39 IST)
ஆம்பூர் அருகே சென்னை செல்லும் ரயிலை கவிழ்க்க தண்டவாளத்தில் பாறாங்கற்களை வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து சென்னை செண்ட்ரலுக்கு செல்லும் காவேரி எக்ஸ்பிரஸ் இன்று அதிகாலை வழக்கம்போல பயணித்துக் கொண்டிருந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தின் ஆம்பூர் அடுத்த பச்சக்குப்பம் பகுதியில் ரயில் சென்றுக் கொண்டிருந்தபோது தண்டவாளத்தில் வரிசையாக சிமெண்ட் கற்கள், பாறாங்கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்துள்ளது.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த ரயிலின் லோகோ பைலட் உடனடியாக வேகத்தை குறைத்தாலும் ரயிலை நிறுத்த முடியவில்லை. இதனால் ரயில் அந்த பாறைகளை மோதி உடைத்துக் கொண்டு சென்றது. இதனால் ரயில் பெட்டிகள் அனைத்தும் குலுங்க தொடங்கியதால் பயணிகள் பீதி அடைந்தனர்.

ஒருவழியாக வேகம் குறைந்த ரயில் பச்சக்குப்பம் பகுதியில் நிறுத்தப்பட்டது. இந்த சம்பவம் குறித்து உடனடியாக ஆம்பூர் மற்றும் ஜோலார்பேட்டை ரயில் நிலையங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர் ரயிலில் பாறாங்கல் மோதி சேதமடைந்த பகுதிகள் பார்வையிடப்பட்டு 15 நிமிடம் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது.

இதுகுறித்து சம்பவ இடம் விரைந்த ஜோலார்பேட்டை காவல்துறையினர் நேரில் சென்று ஆஅய்வு செய்தனர். மேலும் ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகளும் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபமாக தமிழகத்தின் பல பகுதிகளில் தண்டவாளத்தில் லாரி டயர், பாறாங்கல் போன்றவற்றை போட்டு ரயிலை கவிழ்க்க சதி செய்யும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்