பேரறிவாளனை கருணைக்கொலை செய்யுங்கள்: அற்புதம்மாள் உருக்கமான வேண்டுகோள்

Webdunia
வெள்ளி, 15 ஜூன் 2018 (20:31 IST)
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை விடுவிக்க பல ஆண்டுகளாக அவரது தாயார் அற்புதம்மாள் போராடி வரும் நிலையில் கடைசி முயற்சியாக தமிழக அரசு மூலம் மீண்டும் ஒரு முயற்சி செய்தார்.
 
ராஜீவ் கொலையாளிகள் ஏழு பேர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து தமிழக அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கையை பரிசீலனை செய்த மத்திய அரசு பின்னர் இந்த கோரிக்கையை குடியரசு தலைவருக்கு அனுப்பியது. ஆனால் மத்திய அரசு, தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்துவிட்டதால் பேரறிவாளன் விடுதலை கேள்விக்குறியாகிவிட்டது. ஜனாதிபதியின் நிராகரிப்பை மீறி நீதிமன்றமும் எந்த உத்தரவும் இட முடியாது என்பதால் பேரறிவாளன் உள்பட ஏழு பேர்களின் விடுதலை இனி சாத்தியம் இல்லை என்று சட்ட வல்லுனர்கள் கூறி வருகின்றனர்.
 
இந்த நிலையில் தன்னுடைய கடைசி நம்பிக்கையும் பொய்த்துவிட்டதால் மனமுடைந்த அற்புதம்மாள் இன்று செய்தியாளர்களிடம் கூறியபோது, 'என் மகன் விடுதலை விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் கைவிரித்துவிட்டன. மாநில அரசு இவ்விஷயத்தில் திறம்பட செயல்படவில்லை. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா என் மகன் வீட்டிற்கு வந்துவிடுவான் என உறுதி அளித்திருந்தார். ஆனால் இப்போது நான் சோர்வுற்று உணர்கிறேன். எனது மகனை கருணைக் கொலை செய்துவிடுங்கள் என மத்திய, மாநில அரசாங்கத்திற்கு கடிதம் எழுத உள்ளேன். கடந்த 27 வருடங்களாக அவர் சிறையில் கஷ்டப்பட்டு வருகிறார். அவர் இனிமேலும் கஷ்டப்படுவதை என்னால் பார்க்க முடியாது. அதற்கு அரசாங்கமே அவரை கருணைக் கொலை செய்து விடலாம். அவரை விடுவிக்க அரசாங்கம் தனது அதிகாரங்களை பயன்படுத்தவில்லை. குறைந்தபட்சம் அவர் சிறையில் கஷ்டப்படாமல் இருக்க கருணைக் கொலையாவது செய்யலாம்' என்று உருக்கமாக தெரிவித்தார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்