திமுகவில் பதவிகள் விற்பனைக்கு ; என்னை பார்த்து பயம் : போட்டுத் தாக்கும் அழகிரி

Webdunia
திங்கள், 13 ஆகஸ்ட் 2018 (16:02 IST)
திமுகவின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் செயல்படாத தலைவராக இருக்கிறார் என அழகிரி புகார் கூறியுள்ளார்.

 
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின், ஸ்டாலின் தலைவராக்கப்படலாம் எனவும், அழகிரி மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்படுவார் எனவும் கடந்த சில நாட்களாகவே செய்திகள் பரவி வருகிறது. 
 
இன்று காலை மெரினா கடற்கரைக்கு குடும்பத்துடன் வந்து கருணாநிதிக்கு சமாதிக்கு மரியாதை செலுத்திய அழகிரி, தனது ஆதங்கத்தை கொட்டவே இங்கு வந்தேன் என தெரிவித்து திமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதோடு, கட்சியில் தனது ஆதங்கம் பற்றி இன்னும் 2 அல்லது 3 நாட்களில் கூறுகிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 
 
ஆனால், அழகிரியை திமுகவில் மீண்டும் சேர்க்கக் கூடாது என திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் மற்றும் சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ அன்பழகன் ஆகியோர் ஸ்டாலினிடம் வலியுறுத்தியுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது.
 
இந்நிலையில், ஒரு ஆங்கில நாளிதழுக்கு அழகிரி அளித்த பேட்டியில் “நான் மீண்டும் திமுகவிற்கு வருவதை ஸ்டாலின் விரும்பவில்லை. நான் எங்கே பெரிய தலைவராக உருவாகி விடுவேனோ என பயப்படுகிறார்கள். திமுகவில் முக்கிய கட்சி பதவிகள் விற்கப்படுகிறது. ஸ்டாலின் செயல்படாத ஒரு தலைவராக இருக்கிறார். அவர் செயல்பட்டிருந்தால் ஆர்.கே.நகரில் திமுக டெபாசிட் இழந்திருக்காது. திமுகவை அழிக்க நினைப்பவர்களை கருணாநிதியின் ஆத்மா தண்டிக்கும்” என அவர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்