ஈரோடு மாவட்டம் சிவகிரியில் நடந்த கொலை சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில் குற்றவாளிகளை போலீஸார் கைது செய்திருப்பதற்கு அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் சிவகிரியில் கடந்த மே 1 அன்று முதியவர்களான ராமசாமி அவரது மனைவி ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். வீட்டில் தனியாக வசிக்கும் முதியவர்களை குறிவைத்து இந்த கும்பல் கொலை செய்து நகைகள், பணம் கொள்ளையடித்ததாக கூறப்படுகிறது.
இந்த வழக்கில் ஆச்சியப்பன், ரமேஷ், மாதேஸ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளனர், அவர்களோடு தங்கத்தை உருக்கி கொடுத்த ஞானசேகரனும் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலீஸாரின் இந்த துரித நடவடிக்கையை பாராட்டியுள்ள தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை “ஈரோடு மாவட்டம் சிவகிரியில், கடந்த ஒன்றாம் தேதி அன்று, தனியாக வசித்து வந்த ஐயா ராமசாமி கவுண்டர் மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் விரைந்து செயல்பட்டு, குற்றவாளிகளைக் கைது செய்துள்ள தமிழக காவல்துறைக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதால், இந்த வழக்கு தொடர்பாக, சிவகிரியில் தமிழ்நாடு பாஜக சார்பில் நாளை நடைபெறவிருந்த தொடர் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்படுகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளாகவே, கொங்கு பகுதியில் தனியாக வசித்து வந்தவர்கள் படுகொலை செய்யப்படுவது தொடர்ந்து வருகிறது. தமிழக காவல்துறை, அனைத்து வழக்குகளிலும், விரைவில் குற்றவாளிகளை கைது செய்து, சட்டத்தின் முன்பு நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவித்துள்ளார்.
Edit by Prasanth.K