வரும் சட்டமன்றத் தேர்தலை குறிவைத்து, தமிழக வெற்றிக் கழகத்தின் செயல் திட்டங்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தலைவர் விஜய் தலைமையில், 234 தொகுதிகளிலும் பூத் கமிட்டிகள் உருவாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கோயம்புத்தூரில் முதல்கட்ட பூத் கமிட்டி மாநாடு இரண்டு நாட்கள் நடைபெற்றது. 13 மாவட்டங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட தலைவர் விஜய், உரையாற்றி, எதிர்காலப் பணிகள் குறித்து வழிகாட்டினார்.
இப்போது, இரண்டாம் கட்ட மாநாட்டிற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதுகுறித்து பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்துடன் விஜய் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. மாநாடு நடக்கும் இடமாக வேலூர் தேர்வாகியுள்ளது. இந்த மாநாட்டுக்கான ஆய்வுகள் வேலூர் மற்றும் கிருஷ்ணகிரி பகுதிகளில் நடந்தன.
மாநாடு நடைபெறும் இடத்தை புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். இந்த மாநாட்டில், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கடலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 20 மாவட்டங்களைச் சேர்ந்த பூத் உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர்.