திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின், ஸ்டாலின் தலைவராக்கப்படலாம் எனவும், அழகிரி மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்படுவார் எனவும் கடந்த சில நாட்களாகவே செய்திகள் பரவி வருகிறது.
இன்று காலை மெரினா கடற்கரைக்கு குடும்பத்துடன் வந்து கருணாநிதிக்கு சமாதிக்கு மரியாதை செலுத்திய அழகிரி, தனது ஆதங்கத்தை கொட்டவே இங்கு வந்தேன் என தெரிவித்து திமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதோடு, கட்சியில் தனது ஆதங்கம் பற்றி இன்னும் 2 அல்லது 3 நாட்களில் கூறுகிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், அழகிரியை திமுகவில் மீண்டும் சேர்க்கக் கூடாது என திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் உட்பட பலரும் ஸ்டாலினிடம் வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக, சேப்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ அன்பழகன் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசிய அவர் அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்க்கக்கூடாது என வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய அன்பழகன் “எங்கள் தலைவர் கருணாநிதியின் மறைவில் இருந்தே நாங்கள் இன்னும் மீளவில்லை. கருணாநிதியால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர் அழகிரி. அவரின் கருத்துகளுக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. நாளை கூடும் செயற்குழு கூட்டத்தில் ஸ்டாலின் விரிவான பதிலை கூறுவார். அழகிரியுடன் யாரும் தொடர்பில் இல்லை” என அவர் தெரிவித்தார்.