அஜித் ரசிகரை கத்தியால் குத்திய விஜய் ரசிகர்! சீரியஸ் ஆகும் சினிமா மேட்டர்

Webdunia
புதன், 31 ஜூலை 2019 (08:06 IST)
இதுநாள் வரை சமூக வலைத்தளங்களில் அநாகரீகமாக மோதிவந்த அஜித், விஜய் ரசிகர்கள் தற்போது கத்திக்குத்தி லெவலுக்கு சென்றுவிட்டனர். இதுபோன்ற நிகழ்வுகள் தமிழக இளைஞர்கள் சீரழிந்து வருவதை காட்டுவதாக சமூக நல ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
 
சினிமா நடிகர்களின் தீவிர ரசிகர்கள் தமிழகத்தில் பல ஆண்டுகளாக உள்ளனர். எம்ஜிஆர்-சிவாஜி, கமல்-ரஜினி ஆகியோர்களுக்கும் வெறித்தனமான ரசிகர்கள் இருந்தாலும் அந்த காலகட்டத்தில் சமூக வலைத்தளங்கள் இல்லாத்தால் அங்கொன்றும் இங்கொன்றுமாக பிரச்சனைகள் இருந்து வந்தன. ஆனால் தற்போது சமூக வலைத்தளங்கள், தொழில்நுட்ப வளர்ச்சியால் அஜித்-விஜய் ரசிகர்கள் தினமும் அநாகரீகமாக மோதிக்கொள்வதை தினசரி வழக்கமாக வைத்துள்ளனர். ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தி ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து வருவதை பலர் கண்டித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் சென்னை புழல் பகுதியை சேர்ந்த உமாசங்கர் என்ற அஜித் ரசிகரை ரோஷன் என்ற விஜய் ரசிகர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரே பகுதியை சேர்ந்த இருவரும் நேற்று அஜித், விஜய் குறித்த வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கும் போது வாக்குவாதம் திடீரென முற்றியதால் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ரோஷன், உமாசங்கரை கத்தியால் குத்தியுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் மிதந்த உமாசங்கர் தற்போது ஆபத்தான நிலையில் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்
 
சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு அம்சம் என்பதை தாண்டி சினிமாக்காரர்களை முதல்வர் நாற்காலியில் உட்கார வைத்த தமிழர்கள் தற்போது சினிமா நடிகருக்கான சண்டை போட்டு தங்கள் வாழ்க்கையையும் இழந்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட நடிகர்கள் கோடியில் புரண்டு சொகுசு வாழ்க்கையில் ஈடுபட்டு வரும் நிலையில் அவர்களது ரசிகர்கள் தேவையில்லாமல் வீண் சண்டை போட்டு தங்கள் வாழ்வின் பெரும்பகுதியை சிறையில் கழிக்கும் நிலை தேவையா? என்ற கேள்வியே எழுகின்றது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்