நள்ளிரவில் பைக் ரேசில் ஈடுபட்ட இளைஞர் உயிரிழப்பு

Webdunia
ஞாயிறு, 2 ஜூன் 2019 (10:17 IST)
நள்ளிரவில் சென்னை மெரினா கடற்கரையில் ஏராளமான இளைஞர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்துவந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு குவிக்கப்பட்ட போலீசாரையும் மீறி இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபட்டனர்.
 
தமிழகத்தில் பைக் ரேஸ் மற்றும் இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்வது என பல்வேறு சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகின்றன. பெரும்பாலும் இரவு நேரங்களில் இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்கின்றனர்.  
 
அந்தவகையில் நேற்று இரவு மெரினா கடற்கரையில் ஏராளமான இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபட உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று இரவு முதலே ஏராளமான போலீசார் மெரினாவில் குவிக்கப்பட்டனர். சாலையின் நடுவே தடுப்புகள் அமைத்து போலீசார் வாகனசோதனையில் ஈடுபட்டு அங்கு வந்த இளைஞர்களை போலீசார் திருப்பி அனுப்பினர். அத்தனையும் மீறி கெடுபிடியாக பைக் ரேஸில் ஈடுபட்டதில் ஒரு பைக் விபத்துக்குள்ளானது. 
 
அதில் இரண்டு பேர் அமர்ந்திருக்க வீலிங் செய்தபோது பின்னல் அமர்ந்திருந்த இளைஞர் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பைக் ஓட்டிய இளைஞர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
 
இதுபோன்ற சம்பவங்களால் அவர்களுக்கும், அவர்களால் மற்றவர்களுக்கும் ஆபத்து ஏற்படும் நிலை தான் உண்டாகிறது. இதை காவல் துறையினர் கண்டு கொள்வதே இல்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இனியாவது காவல்துறை விழித்துக்கொண்டு அச்சுறுத்தும் வகையிலும் இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்யும் நபர்களுக்கு தண்டனை வழங்கி ஆபத்துக்கள் நிகழாத வண்ணம் காக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்