தமிழில் நீட் எழுதியவர்களுக்கு 196 மதிப்பெண்கள் எக்ஸ்ட்ரா - நீதிமன்றம் அதிரடி

Webdunia
செவ்வாய், 10 ஜூலை 2018 (11:50 IST)
வினாத்தாள் குளறுபடியால், தமிழில் நீட் எழுதியவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள்  வழங்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 
நீட் தேர்வு வினாத்தாள், பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்படும் போது, அதில் பல பிழைகள் ஏற்படுகிறது. கேள்வித்தாளில் பல்வேறு பிழைகள் இருப்பதால், மாணவர்களால் ஒழுங்காக தேர்வெழுத முடிவதில்லை. கஷ்டப்பட்டு படிக்கும் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் விதத்தில் கேள்வித்தாள்களில் பல்வேறு பிழைகள் உள்ளது.
 
குறிப்பாக இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிய தமிழக மாணவர்கள் நீட் கேள்வித் தாள்களினால் கடும் அதிருப்திக்கு ஆளாகினர். ஏனென்றால் தமிழில் வழங்கப்பட்ட வினத்தாளில் 49 வினாக்கள் தவறாக மொழி பெயர்க்கப்பட்டு இருந்தது.
 
இதனை எதிர்த்தும் கருணை மதிப்பெண் வழங்கக்கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி ரங்கராஜன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் தீர்ப்பு நீட் தேர்வின் முடிவுகள் வெளியீட்டிற்கு முன்னரே வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி நடக்கவில்லை. மேலும் வழக்கம்ப்போல் இந்த வருடமும் நீட் தேர்வினால் பிரதீபா என்ற தமிழக மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் தமிழில் நீட் எழுதிய மாணவர்களுக்கு ஒரு வினாவுக்கு 4 மதிப்பெண் வீதம் 49 வினாக்களுக்கு 196 மதிப்பெண் கருணை மதிப்பெண்ணாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
மேலும், ஒரு வாரத்தில் மருத்துவ படிப்புக்கான புதிய தரவரிசைப் பட்டியலை வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்