ஓடும் பஸ்ஸில் 19 வயது பெண்ணுக்கு ரகசிய பிரசவம்! குழந்தையை சாலையில் வீசிக் கொன்ற கொடூரம்!

Prasanth K

புதன், 16 ஜூலை 2025 (10:37 IST)

மகாராஷ்டிராவில் ஓடும் பேருந்திலேயே டெலிவரி பார்த்து குழந்தையை சாலையில் வீசிக் கொன்ற 19 வயது இளம்பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

மகாராஷ்டிராவில் உள்ள பர்பானி பகுதியை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண் ரிக்கிகா தேரே. இவரும் அல்தாப் ஷேக் என்ற இளைஞரும் ஸ்லீப்பர் கோச் பஸ் ஒன்றில் புனேயில் இருந்து பர்பானிக்கு பயணம் செய்துள்ளனர். ரித்திகா நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். பேருந்தில் ஏறிய பிறகு ரித்திகாவிற்கு பிரசவ வலி எடுத்துள்ளது.

 

ஆனால் சத்தமே இல்லாமல் ஸ்லீப்பர் கோச்சுக்குள் அல்தாப் ஷேக்கின் உதவியோடு குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார் ரித்திகா. அதன்பின்னர் குழந்தையை ஒரு துணியில் சுற்றி ஜன்னல் வழியாக சாலையில் வீசியுள்ளனர். ஜன்னல் வழியாக எதையோ வீசுவதை கண்டு டிரைவர் என்னவென்று விசாரித்தபோது மனைவி வாந்தி எடுத்ததாகவும், அதை கவரில் வைத்து வீசியதாகவும் சமாளித்துள்ளார் அல்தாப் ஷேக்.

 

ஆனால் குழந்தை துணியில் சுற்றப்பட்டு வீசப்பட்டதை சாலையில் சென்ற ஒரு நபர் பார்த்துள்ளார். பிறந்த சிசு அதில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக அதை போலீஸுக்கு தெரிவித்துள்ளார். அதன்பேரில் உடனடியாக அந்த பேருந்தை துரத்தி சென்று நிறுத்திய போலீஸ் அதுகுறித்து பேருந்தில் இருந்தவர்களிடம் விசாரித்தனர். அப்போது ரித்திகா பேருந்தில் ஏறியபோது கர்ப்பமாக இருந்ததும், தற்போது வெறும் வயிறாக இருப்பதையும் கண்டு டிரைவரும், நடத்துனரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

பின்னர் ரித்திகாவையும், அல்தாப் ஷேக்கையும் அழைத்துச் சென்று போலீஸார் விசாரித்ததில் அவர்கள் இருவரும் திருமணமானவர்கள் எனக் கூறியுள்ளனர். ஆனால் அதற்கு அவர்களிடம் எந்த ஆதாரமும் இல்லை. தொடர்ந்து விசாரித்ததில் இருவரும் உல்லாசமாக இருந்ததில் கரு உருவாகிவிட்டதாகவும், அதை ரகசியமாக வெளியேற்ற ஆம்னி பஸ்ஸில் சென்றதாகவும் ஒப்புக் கொண்டுள்ளனர். சாலையில் வீசப்பட்டதில் அந்த குழந்தை இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்