மகாராஷ்டிரா மாநிலத்தில், "உணவகத்தில் உணவு சரியில்லை, பருப்பு தரமானதாக இல்லை" என்று கூறிய எம்.எல்.ஏ. ஒருவர், உணவக ஊழியரை தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், புல்தானா தொகுதி எம்.எல்.ஏ. சஞ்சய் கெய்க்வாட் என்பவர், ஆகாஷ்வாணி எம்.எல்.ஏ. உணவகத்தில் சாப்பாடு ஆர்டர் செய்திருந்தார். அதில் பருப்பிலிருந்து துர்நாற்றம் வீசியதாகவும், இதனை அடுத்து அந்த எம்.எல்.ஏ. உணவகத்திற்குள் உள்ளே சென்று, பருப்பு தயாரித்த ஊழியர்களிடம் விசாரணை செய்ததாகவும் தெரிகிறது.
அதன் பிறகு, பருப்பு பொட்டலத்தை நுகர்ந்து பார்த்து, "இந்த பருப்பு சாப்பிட்டால் எனக்கு வயிற்று வலிதான் வரும், பருப்பு கெட்டு போய்விட்டது. இதை யார் உங்களுக்கு கொடுத்தது? உங்களுக்கு சப்ளை செய்தவர் யார்?" என சரமாரியாக கேள்வி கேட்டார். "எனக்கே இப்படி உணவு கொடுக்கிறீர்கள் என்றால், மற்றவர்களுக்கு இதைவிட மோசமாகத்தானே கொடுப்பீர்கள்? இப்படி கெட்டுப் போன உணவைச் சாப்பிட்டால் நோய் வந்து இறந்து விடுவார்கள்" என்றும் அவர் கூறினார். ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த எம்.எல்.ஏ. உணவக ஊழியரை சரமாரியாக அடித்தார். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அவர் செய்தியாளரிடம் கூறியபோது, "உணவகத்தில் தயாரிக்கப்படும் உணவு மிகவும் மோசமாக இருந்தது. மேலாளரை அழைத்து அவரை சாப்பிட சொன்னேன். ஆனால் அவர் சாப்பிட மறுத்தார். தினமும் ஏராளமான புகார்கள் வந்ததால்தான் இங்கு விசாரணை செய்ய வந்தேன்" என்று கூறினார்.
இருப்பினும், "ஒரு எம்.எல்.ஏ. விசாரணை செய்யலாம், ஆனால் அதற்காக ஊழியரை அடிக்கலாமா?" என்பது போன்ற விமர்சனங்கள் பதிவாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.