மகாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில், பா.ஜ.க. எம்.எல்.ஏ. சுரேஷ் தாஸ் என்பவரின் மகன் சாகர் தாஸ் ஓட்டி சென்றதாக கூறப்படும் கார் மோதியதில், 34 வயது இளம் தொழிலதிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர் நிதின் பிரகாஷ் ஷெல்கே என்றும், இவர் தனது மோட்டார்சைக்கிளில் 'யூ-டர்ன்' எடுத்துக் கொண்டிருந்தபோது, அதிவேகமாக வந்த சாகர் தாஸ் கார் அவர் மீது மோதியதாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த விபத்து குறித்த சிசிடிவி வீடியோவில், ஷெல்கே பரபரப்பான சாலையில் 'யூ-டர்ன்' எடுக்க முயலும்போது, கார் அவரை பெரும் வேகத்துடன் மோதியது தெளிவாக பதிவாகியுள்ளது.
விபத்துக்குள்ளான காரை சாகர் தாஸ் ஓட்டி வந்ததாகவும், அவருடன் ஒரு நண்பர் இருந்ததாகவும் கூறப்படுகிறது. காவல்துறையினர் முதலில் சாகர் தாஸ் நண்பர் சுரேஷ் தாஸ் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்த காரை பறிமுதல் செய்ததாகவும், சுரேஷ் தாஸ் மீது வழக்குப்பதிவு செய்ய முயன்றதாகவும் கூறப்பட்டது.
ஆனால் அகமதுநகர் காவல் கண்காணிப்பாளர், எம்.எல்.ஏ மகன் கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தியதுடன், மேலதிக விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.