மகாராஷ்டிராவில் ஒரு பள்ளியில் 5 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவிகள், பள்ளி கழிவறையில் இரத்த கறைகள் கண்டறியப்பட்டதை தொடர்ந்து, மாதவிடாய் வருகிறதா என்பதை சரிபார்க்க ஆசிரியர்களால் நிர்வாணப்படுத்தி சோதனை செய்யப்பட்டதாக கூறப்படுவது பெற்றோர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி முதல்வர், 5 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவிகளை பள்ளி மண்டபத்திற்கு வரவழைத்து, கழிவறை தரையில் துப்புரவுப் பணியாளர்களால் கண்டறியப்பட்ட இரத்தக் கறைகளின் படங்களை காட்டியுள்ளார்.
பின்னர், முதல்வர் மாணவிகளை இரண்டு குழுக்களாகப் பிரிக்க உத்தரவிட்டுள்ளார்: மாதவிடாய் உள்ளவர்கள் மற்றும் இல்லாதவர்கள். மாதவிடாய் இல்லை என்று கூறிய 10 முதல் 12 வயதுடைய சில மாணவிகளை சரிபார்க்க ஒரு பெண் பியூன் பணிக்கப்பட்டுள்ளார்.
பியூன், மாணவிகளின் உள்ளாடைகளை சோதனை செய்தபோது, சானிட்டரி நாப்கின் பயன்படுத்திய ஒரு மாணவியை மாதவிடாய் இல்லை என்று கூறியவர்கள் குழுவில் கண்டறிந்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, முதல்வர் அந்த மாணவியை மற்ற மாணவிகள் மற்றும் ஊழியர்கள் முன்னிலையில் திட்டி அவமானப்படுத்தியுள்ளதாக தெரிகிறது..
இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெற்றோர்கள், ஆத்திரமடைந்து பள்ளிக்கு வெளியே திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இதுகுறித்து காவல் நிலையத்தில் பள்ளி நிர்வாகத்திற்கு எதிராகப் புகார் அளித்துள்ளனர்.இந்த புகாரின் அடிப்படையில் பள்ளி முதல்வர் மற்றும் ஒரு பியூன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் சிலரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது," என்று மகாராஷ்டிரா காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.