அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 15 பேர் காயம் …ஒருவர் படுகாயம் ...

Webdunia
செவ்வாய், 15 ஜனவரி 2019 (16:37 IST)
பொங்கலை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் இன்று நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 15 பேருக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் பொங்கல், மாட்டுப்பொங்கல் மற்றும் காணும் பொங்கல் ஆகியப் பண்டிகைகளின் போது ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவது தொன்று தொட்டு வரும் பழக்கம். ஆனால் இடையில் ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது காளைகள் துன்புறுத்துவதாக பீட்டா போன்ற அமைப்புகள் வைத்த குற்றச்சாட்டால் நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது. அதற்கு எதிராக மக்கள் தமிழகம்  முழுவதும் போராடி தடையை நீக்கி அரசை புதிய சட்டமியற்ற வைத்தனர்.

அதையடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டுப் போட்டிகள் பலத்த பாதுகாப்போடு நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த சம்மதம் தெரிவித்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு. அதையடுத்து பொங்கல் திருநாளான இன்று, உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி மதுரை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் தொடங்கியது. இந்த ஜல்லிக்கட்டுப் போட்டிக்காக புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டு அவற்றை மீறக்கூடாது என மாடுபிடி வீரர்களிடம் உறுதிமொழியும் வாங்கப்பட்டுள்ளது.

காலை முதல் மாலை 4 மணி வரை ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுகிறது. இதற்காக மதுரை மாநகர காவல் ஆணையர் தலைமையில் 1,100 போலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். வாடிவாசல் பகுதியில் சிசிடிவி கேமரா அமைக்கப்பட்டு காளைகள் துன்புறுத்தப்படுகின்றனவா என்றும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் காயமடைவோர்க்கு சிகிச்சையளிக்க 10 மருத்துவர்கள் கொண்ட குழுவும், 5 ஆம்புலன்ஸ்களும் மற்றும் தீயணைப்பு வாகனங்களும் ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்திற்கு அருகில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த போட்டியில் 630 காளைகளும்,500 வீரர்களும் பங்கேற்கின்றனர். இதுவரையிலான தகவலின் படி போட்டியில் 15 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஒருவர் மட்டும் பலத்த காயமடைந்துள்ளதால் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் மற்றவர்களுக்கு அங்கேயே உள்ள மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளதாகவும் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்