மலச்சிக்கல் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள் என்ன....?

Webdunia
மலச்சிக்கலுக்கு முக்கியக் காரணம், நம் உணவு முறை. கொழுப்பு மிகுந்த மேற்கத்திய உணவு வகைகளை அதிகமாகச் சாப்பிடுவது. பால் சார்ந்த உணவு வகைகளை அதிகமாகச் சாப்பிடுவது, பிட்ஸா, பர்கர், நூடுல்ஸ் போன்ற துரித உணவு வகைகளையும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளையும் அதிக அளவில் சாப்பிடுவதேயாகும்.
நார்ச்சத்துள்ள உணவு வகைகளைக் குறைவாகச் சாப்பிடுவது. தண்ணீர் குறைவாகக் குடிப்பது. காய்கறி, கீரை, பழங்களைச் சாப்பிடாதது போன்ற தவறான உணவுப் பழக்கங்கள்தான் பலருக்கும் மலச்சிக்கலை உண்டாக்குகின்றன.
 
தினமும் மலம் கழிக்கும் முறை சரியாக அமையாவிட்டால், அது நாளடைவில் மலச்சிக்கலுக்கு வழி வகுக்கும். குறிப்பாக, மலம் வருகிற உணர்வு உண்டாகும்போது கழிப்பறை அருகில் இல்லாதது, முக்கிய வேலையில் ஈடுபட்டிருப்பது, பயணத்தில் இருப்பது போன்ற காரணங்களால் மலம் கழிப்பதைத் தவிர்த்தால் காலப்போக்கில் பெருங்குடலில் உள்ள உணர்வு நரம்புகள் செயலிழந்து மலத்தை வெளியேற்ற  வேண்டும் என்கிற உணர்வைத் தெரிவிக்காது. இதன் காரணமாக மலச்சிக்கல் ஏற்படும்.
 
முதுமையில் உணவுமுறை மாறுவது, உடற்பயிற்சி குறைவது, தேவையான அளவுக்குத் தண்ணீர் குடிக்காதது மலச்சிக்கலுக்கு வழிவிடும். மூட்டுவலி, இடுப்புவலி உள்ள முதியவர்கள் அடிக்கடி மலம் கழிப்பதைத் தவிர்ப்பதால் அவர்களுக்கு மலச்சிக்கல் வருகிறது.
 
கர்ப்ப காலத்தில் மசக்கை காரணமாக தண்ணீர் அதிகமாகக் குடிக்காமல் இருப்பது, கருவில் வளரும் குழந்தை தாயின் குடலை அழுத்துவது, ஹார்மோன் மாற்றம், ஆசனவாய் சுருங்குதல் ஆகிய காரணங்களால் கர்ப்பிணிகளுக்குத் தற்காலிகமாக மலச்சிக்கல் உண்டாகலாம்.
 
இளம் பெண்களுக்குப் பெருங்குடல் சுவரில் தளர்ச்சி ஏற்பட்டு ‘இடியோபதிக்டிரான்சிட் கோலன்’ எனும் நோய் வரலாம். அப்போது  அவர்களுக்கு மலச்சிக்கல் உண்டாகும். 
 
குழந்தைகளுக்குத் தாய்ப்பாலை நிறுத்திவிட்டு செயற்கைப் புட்டிப்பால் தரப்படும்போது, மலச்சிக்கல் ஏற்படலாம். கழிப்பறையை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரியாத குழந்தை களுக்கு ஆரம்பத்தில் மலச்சிக்கல் வரலாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்