திருமலையே ஆஞ்சநேயர் பிறப்பிடம்... திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!

Webdunia
வியாழன், 22 ஏப்ரல் 2021 (08:41 IST)
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் (திருமலை) உள்ள அஞ்சனாத்ரி மலையில் ஆஞ்சநேயர் பிறந்தார் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

 
கர்நாடக மாநிலம் பெல்லாரியில் உள்ள ஹம்பி ஷேத்திரம் அனுமனின் பிறப்பிடம் என்று கூறப்படுகிறது. மேலும் இது கிஷ்கிந்தா என்றும் அழைக்கப்படுகிறது. அங்கு அனுமன் ஒரு ராஜ்யத்தை நடத்தியிருக்கலாம் என்றும் அனுமன் அஞ்சனாத்ரி மலையில் இருந்து அங்குச் சென்று சுக்ரீவனுக்கு உதவியிருக்கலாம் என்றும் அறிவியல் பூர்வமாக ஆராயப்பட்டது.
 
ஆனால், இப்போது திருப்பதி ஏழுமலையான் கோவிலில் (திருமலை) உள்ள அஞ்சனாத்ரி மலையில் ஆஞ்சநேயர் பிறந்தார் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதன்படி நேற்று திருமலையில் உள்ள நாதநீராஞ்சன மண்டபத்தில் அஞ்சனாத்ரி மலையில் ஆஞ்சநேயர் பிறந்தார் என்பதை புத்தகமாக அச்சடித்து திருமலை - திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் வெளியிட்டனர்.
 
இந்த புத்தகத்தில் இருக்கும் சில முக்கிய ஆதாரங்கள் பின்வருமாறு...
1. வெங்கடேஸ்வர மதியம், வராக புராணம், கம்பராமாயணம், வால்மீகி ராமாயணம் உள்ளிட்ட 12 புராண இதிகாசங்களில் அஞ்சனாத்ரி மலையில்தான் அனுமன் பிறந்தார் என்று கூறப்பட்டுள்ளது.
 
2. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வட ஆற்காடு மாவட்ட கலெக்டராக இருந்த ஸ்டார்டன் ‘சவால் இ ஜவாப்’ என்னும் ஆவண கோப்பில் அஞ்சனாத்ரி மலை பற்றி குறிப்பிட்டுள்ளார்.
 
3. காஞ்சிபுரத்தில் 20 செப்பேடுகளில் அஞ்சனாத்ரி மலை குறித்து கூறப்பட்டுள்ளது.
 
4. ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோயில் கல்வெட்டில் அஞ்சனாத்ரி மலையிலிருந்து உற்சவரான ஸ்ரீ ரங்க நாத மூர்த்தியை கொண்டு வந்ததாக கூறப்பட்டுள்ளது.
 
5. அன்னமாச்சாரியார் 14 ஆம் நூற்றாண்டில் பாடிய கீர்த்தனைகள் மற்றும் சாசனங்கள், இதிகாசங்கள், புராணங்கள், பூகோள ரீதியான தகவல்கள் போன்ற அனைத்திலும் அனுமன் அஞ்சனாத்திரி மலையில் தான் பிறந்தார் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்