கர்நாடக மாநிலத்தில் சுற்றுலா சென்ற பள்ளி மாணவிகள் கடலில் குளித்த போது அலை வந்து இழுத்துச் சென்றதால் நான்கு மாணவிகள் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் கோலார் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் படிக்கும் 54 மாணவிகள் சுற்றுலா சென்ற நிலையில், அதன் ஒரு பகுதியாக முருடேஸ்வரர் கோயில் கடற்கரைக்கு சென்றனர்.
கடலை பார்த்ததும் மாணவிகள் உற்சாகமானதாகவும், கடலின் அழகில் மயங்கிய நிலையில், கடற்கரையில் குளிக்க இறங்கினர். அந்த நேரத்தில் 7 மாணவிகள் கடலில் இழுத்துச் செல்லப்பட்டதாகவும் இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் கதறியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அந்நேரத்தில் ஆசிரியர்கள் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள் கடலில் குதித்து மாணவிகளை காப்பாற்ற முயன்றனர்.
நீண்ட போராட்டத்திற்குப் பிறகு ஏழு மாணவிகளில் மூன்று மாணவிகளை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. ஆனால், நான்கு மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். காப்பாற்றப்பட்ட மூன்று மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுற்றுலா சென்ற இடத்தில் நான்கு மாணவிகள் பரிதாபமாக பலியான சம்பவம் சக மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.