ஆன்லைன் சூதாட்டத்தால் பறிபோன இன்னொரு உயிர்.. தூக்கில் தொங்கி இளைஞர் தற்கொலை..!

Siva

வியாழன், 5 டிசம்பர் 2024 (08:02 IST)
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து ஏற்கனவே பலர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், தற்போது கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஆர்.புரம் பகுதியைச் சேர்ந்த பிரவீன் என்ற இளைஞர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில மாதங்களாக அவர் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதில் அவர் லட்ச கணக்கில் பணத்தை இழந்ததாகவும், இதைத் தொடர்ந்து பலரிடம் கடன் வாங்கி விளையாடியதாகவும் கூறப்படுகிறது.

பணத்தை இழந்த அதிர்ச்சி மற்றும் கடன் கொடுத்தவர்களின் நெருக்கடி ஆகியவற்றால், மன உளைச்சலில் அவர் கடந்த சில நாட்களாக இருந்ததாக தெரிகிறது. இதையடுத்து, நேற்று திடீரென அவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்லைன் சூதாட்டத்தில் ஆரம்பத்தில் பணம் லாபம் கிடைப்பது போல தோன்றினாலும், அதன் பின்னர் பணம் கொஞ்சம் கொஞ்சமாக நஷ்டம் அடையும். ஒரு கட்டத்தில் மிகப்பெரிய நஷ்டம் அடைய வாய்ப்பு இருப்பதாக சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

இதனால், ஆன்லைன் சூதாட்டத்தை யாரும் விளையாட வேண்டாம் என்றும், மத்திய மற்றும் மாநில அரசுகள் இதனை தடை செய்ய கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.


Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்