காங்கிரஸ் அலுவலகம் முன் குவிந்த ராணுவம்.. டெல்லியில் பரபரப்பு..!

Mahendran

புதன், 16 ஏப்ரல் 2025 (10:32 IST)
டெல்லி நகரில் உள்ள காங்கிரஸ்  தலைமை அலுவலகத்துக்கு வெளியே துணை ராணுவப்படை வீரர்கள் குவிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 
 
காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு எதிராக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பதை எதிர்த்து நாடு முழுவதும் கவனயீர்ப்பு போராட்டங்கள் காங்கிரஸ் சார்பில் இன்று நடைபெற உள்ள நிலையில், டெல்லியில் துணை ராணுவ படைகள் காங்கிரஸ் அலுவலகத்தில் குவிக்கப்பட்டுள்ளது.
 
‘நேஷனல் ஹெரால்ட்’ வழக்கை மையமாகக் கொண்டு, ரூ.988 கோடிக்கும் மேற்பட்ட பண மோசடி குற்றச்சாட்டின் அடிப்படையில், சோனியா, ராகுல் உள்ளிட்டோருக்கு எதிராக விசாரணை நடந்து வருகிறது. இதற்காக, எம்.பி., எம்எல்ஏ-க்களுக்கான விசாரணை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டது.  
 
இந்நிலையில், மத்திய அரசின் போக்கை கண்டித்து, ஒவ்வொரு மாநிலத்திலும் அமலாக்கத்துறை அலுவலகங்களை முற்றுகையிட்டு, மாவட்ட அளவில் மத்திய அரசு அலுவலகங்களுக்கு வெளியே போராட்டம் நடத்தப்பட இருப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதனை முன்னிட்டு, டெல்லியின் அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்துக்கு வெளியே, நூற்றுக்கணக்கான மத்திய பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்