பீகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகளுக்கு கண்டனம் தெரிவித்து, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் ஆணையத்திற்கு நேரடியாகவும் காட்டமாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். "தவறு செய்துவிட்டு தப்பித்து விடலாம் என்று நினைக்க வேண்டாம், நாங்கள் சும்மா விடமாட்டோம்" என்று அவர் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இதை தொடர்ந்து, சோனியா காந்தி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்து கட்சி எம்.பி.க்கள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
"தவறு செய்துவிட்டு நீங்கள் தப்பித்து விடலாம் என்று நினைத்தால் அது தவறு. நாங்கள் உங்களை தேடி வருவோம். கர்நாடக மாநிலத்தில் தேர்தல் மோசடி நடந்ததை ஆதாரத்துடன் வைத்துள்ளோம். தேர்தல் ஆணையத்திற்கு எதிராக நாங்கள் ஆதாரங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவோம். அதன் விளைவுகளில் இருந்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் தப்பிக்க முடியாது. ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் அழிக்க முயற்சிப்பவர்களுடன் நீங்கள் சேர்ந்தால், அதற்குரிய தண்டனையை நிச்சயம் பெறுவீர்கள்."