லஞ்சம் தர மறுத்த லாரி ஓட்டுனரை துப்பாக்கியால் சுட்ட 3 போலீஸ்காரர்கள் கைது!

Webdunia
வெள்ளி, 27 மார்ச் 2020 (15:03 IST)
லஞ்சம் தர மறுத்த லாரி ஓட்டுனரை துப்பாக்கியால் சுட்ட போலீஸ்
கொரோனா வைரஸ் பீதி காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இன்றுடன் மூன்று நாட்கள் ஆகும் நிலையில் இந்த உத்தரவின் காரணமாக பேருந்து, இரயில், விமானம் உள்பட எந்தவித வாகன போக்குவரத்திற்கு அனுமதி இல்லை என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும் அத்தியாவசிய தேவையை கருதி ஒரு சில வாகனங்கள் மட்டும் அனுமதி உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. அவற்றில் ஒன்று காய்கறிகளை ஏற்றி வரும் லாரிகளும் உண்டு
 
இந்த நிலையில் பீகார் மாநிலத்தில் உருளைக்கிழங்கு ஏற்றி வந்த லாரி ஒன்றை நகருக்குள் அனுமதிக்க வேண்டும் என்றால் லஞ்சம் தரவேண்டும் என மூன்று காவலர்கள் லாரி ஓட்டுநரை மிரட்டியதாகவும், ஆனால் தன்னால் லஞ்சம் கொடுக்க முடியாது என்றும் தன்னிடம் லஞ்சம் கொடுக்க பணம் இல்லை என்றும் ஓட்டுநர் கூறியதாகவும் தெரிகிறது
 
இதனை அடுத்து ஆத்திரம் அடைந்த போலீசார் ஓட்டுநரை துப்பாக்கியால் சுட்டு, அடித்து காயப்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதனையடுத்து லாரி ஓட்டுனர் செய்த புகாரின் அடிப்படையில் 3 போலீசார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்
 
சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவேண்டிய காவலர்களே சட்டத்தை தன் கையில் எடுத்துக்கொண்டு லஞ்சம் கேட்டது மட்டுமின்றி ஓட்டுநரை துப்பாக்கியால் சுட்டும் காயப்படுத்தியும் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 3 காவல்துறையினர்களின் இந்த அடாவடியான செயலுக்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. உயிரை பணயம் வைத்து லட்சக்கணக்கான காவல்துறையினர் ஊரடங்கு உத்தரவை கட்டிக்காக்கும் பணியில் இருக்கும் நிலையில் இவர்கள் போன்ற ஒருசிலரால் ஒட்டுமொத்த காவல்துறைக்கே களங்கம் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்