இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் உயர்ந்துள்ள நிலையில் உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் மருந்து கண்டிபிடிக்கும் பணிகள் உள்ளிட்ட சிலவற்றை குறித்து பிரதமர் மோடி மக்களுக்கு உரையாற்றியுள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அவர் ”கொரோனாவிற்கு எதிராக இந்தியா வலிமையுடன் போராடி வருகிறது. பேரிடர் காலத்தில் நாட்டு மக்களுக்கு தேவையான அனைத்து சலுகைகளையும் மத்திய அரசு வழங்கியுள்ளது. இலவச எரிவாயு, உணவு பொருட்கள், கடன் ஆகியவை பயனாளர்களுக்கு சென்று சேர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது” என்று கூறியுள்ளார்.
மேலும் ”இந்திய மருத்துவத்துறை ஒட்டுமொத்த உலகிற்கே சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது. கொரோனாவுக்கு தடுப்பு மருந்தை இந்தியா கண்டுபிடிப்பதிலும் அனைத்து நாடுகளுக்கும் வழங்குவதிலும் பெரும்பங்கு வகிக்கும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.