பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், தனியார் பள்ளிகள் மற்றும் பயிற்சி மையங்களில் ஆன்லைன் வாயிலாக வகுப்புகளை நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூர் நகரில் 20 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கோடைக்காலம் துவங்காத நிலையில் அங்கு தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுவதால் பெங்களூர் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால் அடுக்குமாடி குடியிருப்புகளில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் தேவையின்றி தண்ணீரை அதிகமாக பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. குடிநீர் தட்டுப்பாட்டை போக்க டேங்கர் லாரிகள் மூலம் பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு விநியோகிக்கப்படும் தண்ணீருக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பெங்களூர் மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
மேலும் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சனையால் பெங்களூரில் இருக்கும் ஐடி நிறுவனங்கள், SME நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக நகரில் உள்ள தனியார் பள்ளிகள், பயிற்சி மையங்களை தற்காலிகமாக மூடி, ஆன்லைன் வாயிலாக வகுப்புகளை நடத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.