டெல்லியில் உள்ள மண்டோலி சிறையில் பிரபல ரவுடியான சல்மான் தியாகி, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறை அதிகாரிகள் இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை, மிரட்டி பணம் பறித்தல், மற்றும் மகாராஷ்டிரா கண்ட்ரோல் ஆப் ஆர்கனைஸ்டு கிரைம் ஆக்ட் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர் சல்மான் தியாகி. அவர் ஏன் தற்கொலை முடிவை எடுத்தார் என்பது உடனடியாக தெரியவில்லை. சிறை நிர்வாகம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து, உடலை மீட்டுள்ளனர். மேலும், விசாரணைக்காக, சிறைச்சாலையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது, “சல்மான் தியாகியின் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இது தற்கொலையாக இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிகிறது. இருப்பினும், மரணத்திற்கான உண்மையான காரணத்தை கண்டறிய விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்படும்" என்று தெரிவித்தனர். ஒரு ரவுடி சிறைக்குள் தற்கொலை செய்துகொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.