திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி ரிங் ரோடு பகுதியில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பாரதி என்ற கர்ப்பிணி பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டபோது, அங்கிருந்த பெண் காவலர் ஒருவரின் துரித செயல் தாய், சேய் இருவரின் உயிரையும் காப்பாற்றியுள்ளது.
நிறைமாத கர்ப்பிணியான பாரதி ஆட்டோவில் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தபோது, வழியில் பிரசவ வலி அதிகரித்தது. அதை கண்ட பெண் காவலர் கோகிலா, ஆட்டோவுக்குள்ளேயே பாரதிக்கு பிரசவம் பார்த்துள்ளார்.
கடும் வலியால் துடித்த பாரதியை, கோகிலா தன்னம்பிக்கையுடன் கையாண்டு பாதுகாப்பாக பிரசவம் பார்த்ததாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். இந்த துரித நடவடிக்கையின் மூலம் தாய் மற்றும் குழந்தை இருவரும் எந்தவிதச் சிக்கலுமின்றி பத்திரமாக மீட்கப்பட்டனர்.
தற்போது தாய், சேய் இருவரும் திருப்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நலமுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். பிரசவம் பார்த்த பெண் காவலர் கோகிலா, நர்சிங் படித்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இந்த செயல், கடமையையும் தாண்டி ஒரு மனிதநேயமிக்க செயலாக பார்க்கப்பட்டு, சமூக வலைத்தளங்களில் பாராட்டுகளை குவித்து வருகிறது