உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாயை நோக்கி காலணியை வீச முயன்ற வழக்கில், வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் தான் செய்த செயலுக்காக எந்த வருத்தமும் இல்லை என்று தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் முயற்சிக்கு தன்னைக் "கடவுள்தான் தூண்டினார்" என்றும் அவர் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று நீதிமன்ற அறை எண் 1-ல் விசாரணை நடந்தபோது, 71 வயதான ராகேஷ் கிஷோர் தலைமை நீதிபதியை குறிவைத்து காலணியை வீச முயன்றார். அங்கு இருந்த பாதுகாவலர்கள் உடனடியாக அவரை தடுத்தனர். வெளியேறும் போது, அவர் 'சனாதன தர்மத்தை அவமதிப்பதை பொறுத்துக்கொள்ள முடியாது' என்று முழக்கமிட்டார்.
"நான் செய்தது சரிதான். இதன் விளைவுகளை அறிந்தே இதை செய்தேன்," என்று பேட்டியளித்த அவர், தனது செயலுக்கு காரணம் கடந்த மே மாதம் ஒரு கோயில் வழக்கு விசாரணையின்போது நீதிபதி கவாய் தெரிவித்த கருத்துகள் சமூக வலைதளங்களில் திரித்து பரப்பப்பட்டதுதான் எனக் கூறியுள்ளார்.
இந்த செயல் வழக்கறிஞரின் தொழில்முறை நடத்தை விதிகளை மீறியதால், ராகேஷ் கிஷோரின் வழக்கறிஞர் உரிமத்தை இந்திய வழக்கறிஞர் கவுன்சில் உடனடியாக ரத்து செய்துள்ளது. இருப்பினும், முறையான புகார் அளிக்கப்படாததால், அவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்யாமல் விடுவித்தது.