இந்திய பகுதிகளுக்கு உரிமைகோரும் நேபாளம்; எல்லைக்கு படைகளை அனுப்பியது

Webdunia
புதன், 20 மே 2020 (00:14 IST)
இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் இருக்கும் பகுதிகள் என்று இந்திய அரசு கூறும், லிம்பியாதுரா, காலாபானி, லிபுலேக் ஆகிய பகுதிகளை தங்கள் நாட்டின் பகுதிகளாகச் சேர்க்கப்பட்டிருக்கும் நேபாளத்தின் புதிய அரசியல் வரைபடத்திற்கு அந்த நாட்டின் அமைச்சரவை, திங்களன்று, ஒப்புதல் அளித்துள்ளது.

மகாகாளி (சாரதா) நதி தொடங்கும் இடம் தங்கள் நாட்டு எல்லைக்குள் இருக்கிறது என்று நேபாள அரசு கூறுகிறது. ஆனால் அதை இந்திய அரசு மறுக்கிறது.

சீனக் கட்டுப்பாட்டில் இருக்கும் திபெத்தின் மானசரோவர் பகுதிக்கு நுழைவாயிலாக இருக்கும் லிபுலேக் கணவாய்க்கு செல்லும் எல்லையோர சாலை ஒன்றை இந்தியா தொடங்கிய 10 நாட்களுக்கு பின்னர் நேபாள அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த சாலையை இந்தியா திறந்ததற்கு நேபாள வெளியுறவுத்துறை கடுமையான எதிர்ப்பை வெளியிட்டிருந்தது.

மே எட்டாம் தேதி அன்று காலாபானி, குஞ்சி பகுதிகள் வழியாக லிபுலேக் கணவாய் செல்லும் சாலையை இந்திய அரசு தன்னிச்சையாக திறந்த பின்பு காலாபானி மற்றும் லிபுலேக் பகுதிகள் தங்களுக்கு சொந்தமானவை என்றும் கூறிய நேபாள அரசு, நேபாளில் உள்ள இந்திய தூதர் மற்றும் டெல்லியிலுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆகியோரிடம் தனது கவலைகளை வெளியிட்டிருந்தது.

நேபாள அரசு புதிய வரைபடத்தை அங்கீகரிப்பதற்கு முன் தலைநகர் காத்மண்டுவில் இந்தியாவுக்கு எதிரான போராட்டங்களும் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மான எதிர்ப்புக் குரல்களுடன் கூடிய விவாதமும் நிகழ்ந்திருந்தன.

Image captionகாத்மண்டுவில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற போராட்டம்

ஜம்மு-காஷ்மீர் பிரிவினைக்குப் பிறகு

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்ட பின்பு இந்திய அரசு வெளியிட்ட புதிய அரசியல் வரைபடத்தில் லிம்பியாதுரா, காலாபானி, லிபுலேக் ஆகிய பகுதிகள் இந்திய எல்லைக்குள் சேர்க்கப்பட்டிருந்தன.

"இது புதிய தொடக்கம். ஆனால் இது புதிய விஷயமல்ல மகாகாளி நதிக்குக் கிழக்கே உள்ள பகுதிகள் நேபாளத்துக்கு சொந்தமானவை என்று நாங்கள் நீண்ட நாட்களாகவே கூறி வருகிறோம். இப்போது அப்பகுதிகளை நேபாள அரசு அதிகாரப்பூர்வமாக நாட்டின் வரைபடத்தில் சேர்த்துள்ளது," என்று அந்நாட்டின் விவசாயம் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஞானஷாம் பூஷால் காந்திபூர் தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார்.
இந்திய அரசுடன் வெளியுறவுத்துறை மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அலுவல்பூர்வமாக இந்த பிரச்சனை தீர்க்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
1816 இல் ஆங்கிலேயர்கள் மற்றும் நேபாள தரப்பினரிடையே கையெழுத்திடப்பட்ட சுகாலி ஒப்பந்தத்தின் அடிப்படையில் லிம்பியாதுரா பகுதியில்தான் மகாகாளி நதியின் மூலம் இருப்பதாக நேபாள அரசு கூறி வருகிறது.

ஆனால் லிம்பியாதுரா மற்றும் லிபுலேக் ஆகிய பகுதிகளுக்கு கிழக்கேதான் அந்த நதிக் உருவாவதாக இந்திய அரசு கூறுகிறது.

கொரோனா வைரஸ் அவசரநிலை முடிவடைந்த பின்பு இரு நாட்டின் வெளியுறவு செயலாளர்கள் மட்டத்தில் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திங்களன்று நேபாள அமைச்சரவை எடுத்த முடிவுக்கு பின்பு அரசு அலுவலகங்கள் பிராந்திய மற்றும் உள்ளூராட்சி நிர்வாகங்கள் ஆகியவை புதிய வரைபடத்தை பயன்படுத்த வேண்டும் என்று நேபாள அரசு அறிவுறுத்தும் என்று கருதப்படுகின்றது.

எல்லைக்கு படைகள் அனுப்பிய நேபாள்

கோவிட்-19 நோய்க்கு எதிரான போராட்டங்களில் இரு நாட்டு அரசுகளும் ஒருவருக்கொருவர் ஒத்துழைத்து வந்தாலும் இந்திய நேபாள எல்லையில் பதற்றம் நிலவுகிறது. குஞ்சி - லிபுலேக் சாலையை இந்திய அரசு திறந்த பின்பு இப்பகுதிக்கு தெற்கே உள்ள சாங்ரூ என்னும் கிராமத்துக்கு வரலாற்றிலேயே முதல்முறையாக ஆயுதமேந்திய காவல் படையை அனுப்பி வைத்தது நேபாள அரசு.

அதற்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு நேபாள ஜனாதிபதி பித்யா தேவி பந்தாரி அறிவித்த அரசின் வருடாந்திர கொள்கைகள் மற்றும் திட்டங்களில் நேபாள எல்லையில் இருக்கும் எல்லைச் சாவடிகளில் எண்ணிக்கையை சுமார் 500 அளவுக்கு அதிகரிப்பது குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது.

அவற்றில் பெரும்பாலானவை 1880 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்திய நேபாள எல்லையிலும் சுமார் ஒரு டஜன் சாவடிகள் மட்டுமே 1440 கிலோ மீட்டர் நீளமுள்ள சீன நேபாள எல்லையிலும் அமைக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆக்கிரமிப்புகளிலிருந்து நேபாள பகுதிகளை பாதுகாக்கும் நோக்கத்துடன் இந்த எல்லை பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்