ஆன்லைன் சூதாட்ட மோகத்தால் காவலர் ஒருவர் திருடனாக மாறிய சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதுமே ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு மீதான மோகம் நாளடைவில் பெரும் பிரச்சினையாக மாறி வருகிறது. சூதாட்ட விளையாட்டுகளில் பணத்தை இழக்கும் பலர் மேலும் பல இடங்களில் கடன் வாங்கி சிக்குவது, தற்கொலை செய்து கொள்வது போன்ற செயல்களிலும் ஈடுபடுகின்றனர்.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள வைபின் ஞாறக்கல் பகுதியில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வந்தவர் ஆலப்புழாசை சேர்ந்த அமல்தேவ் சதீசன். இவர் அடிக்கடி ஆன்லைன் சூதாட்ட கேம் விளையாடி வந்துள்ளார். அதில் பணத்தை இழந்ததால் வேறு சிலரிடம் கடன் வாங்கி சுமார் ரூ.30 லட்சத்தை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்துள்ளார்.
கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்டு பிரச்சினை செய்யவே தனது நண்பரின் வீட்டில் திருட திட்டமிட்டுள்ளார். இதற்காக தனது நண்பன் நடேசன் வீட்டிற்கு சென்ற சதீசன் யாரும் கவனிக்காத சமயத்தில் 10 பவுன் நகையை திருடியுள்ளார். இதுகுறித்து போலீஸார் விசாரணை செய்து வந்த நிலையில் சதீசன் மேல் சந்தேகம் இருப்பதாக நடேசன் மனைவி கூறியுள்ளார்.
அதன்படி போலீஸார் நடத்திய விசாரணையில் நகைகளை திருடியதை சதீசன் ஒப்புக் கொண்டுள்ளார். அதில் பாதி நகையை அடகு வைத்ததோடு மீத நகையை விற்றும் உள்ளார். இதுகுறித்து சதீசனை கைது செய்துள்ள போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.