பவ்லேறு களோபரங்களுக்கு பின் ஒருவழியாக கர்நாடகாவில் காலா படம் வெளியானது.
பல போராட்டங்களுக்கு பின் கர்நாடகாவிலும் காலா திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. சில வினியோகஸ்தர்கள் காலா படத்தை வெளியிட முன்வந்தனர்.
இதற்காக, பெங்களூரில் காலா படம் திரையிடப்படும் தியேட்டர்களின் முன்பு இன்று அதிகாலை முதலே ரஜினி ரசிகர்கள் குவிந்திருந்தனர். முதல் நாள் முதல் காட்சியை காண அவர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், பாலாஜி என்ற தியேட்டருக்கு வந்த கன்னட அமைப்பினர் ரஜினி ரசிகர்களை தியேட்டர்களிலிருந்து மிரட்டி வெளியேற்றினர். இதனால், படத்தை பார்க்க முடியாமல் ரஜினி ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
மேலும், இதன் காரணமாக ரஜினி ரசிகர்கள் படத்தை காண பெங்களூருக்கு அருகில் உள்ள ஒசூர் மற்றும் கிருஷ்ணகிரி பகுதிகளுக்கு செல்வதாகவும் செய்திகள் வெளிவந்தது.
இந்நிலையில், இன்று மாலை 2.30 மணிக்கு காலா படம் பெங்களூரில் வெளியாகும் என செய்திகள் வெளியானது. அதன்படி, தியேட்டர்கள் முன்பு போராட்டம் நடத்திய கன்னட அமைப்பினரை போலீசார் அப்புறப்படுத்திய நிலையில் காலா படம் தற்போது அங்கு வெளியாகியுள்ளது. பெங்களூரில் உள்ள மந்திரி மாலில் இப்படம் வெளியிடப்பட்டுள்ளது. மற்ற தியேட்டர்களில் திரையிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.