இந்தியா - பாகிஸ்தான் எல்லை மூடல்.. தூதரக அதிகாரிகள் வெளியேற உத்தரவு: மத்திய அரசு அதிரடி..!

Siva

வியாழன், 24 ஏப்ரல் 2025 (07:32 IST)
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பெஹல்காம் நகரில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து பாகிஸ்தான் உடனான அனைத்து தொடர்புகளையும் துண்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள அதிகாரிகள் ஒரு வாரத்திற்குள் வெளியேற வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் ஆதரவளிப்பதை கைவிடும் வரை சிந்து நதிநீர் பகிர்வு ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாகவும் நேற்று கூடிய மத்திய அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் அட்டாரி - வாகா எல்லை உடனடியாக மூடப்படும் என்றும் இந்த எல்லை வழியாக உரிய அனுமதியுடன் இந்தியாவுக்கு நுழைந்த பாகிஸ்தானியர்கள் மே ஒன்றாம் தேதிக்குள் இதே எல்லை வழியாக வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் பாகிஸ்தானியர்களுக்கு கடந்த காலத்தில் வழங்கப்பட்ட அனைத்து  விசாக்கள் ரத்து செய்யப்படுவதாகவும் இந்தியாவில் உள்ள அனைத்து பாகிஸ்தானியர்களும் 48 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவையின் இந்த அதிரடி எச்சரிக்கைகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்