திருமணத்திற்கு முன்பு, ஆண் மற்றும் பெண் இரு பாலருக்கும் பெற்றோரின் அனுமதி கட்டாயம் என்ற ஒரு புதிய சட்டத்தை இயற்ற வேண்டும் என்று ஹரியானா மாநில பாஜக எம்எல்ஏ ராம் குமார் கௌதம் கோரிக்கை விடுத்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சண்டிகர் சட்டமன்றத்தில் பேசிய ராம் குமார் கௌதம், "இப்போது நிறைய பிள்ளைகள் வீட்டை விட்டு ஓடி போகிறார்கள். பின்னர், சில பெற்றோர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். எனவே, திருமணத்திற்கு முன் பெற்றோரின் அனுமதி கட்டாயமாக்கப்பட வேண்டும். இதற்காக அரசு ஒரு புதிய சட்டத்தை இயற்ற வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.
அவருக்கு ஒதுக்கப்பட்ட நேரம் முடிந்தவுடன், சபாநாயகர் ஹர்விந்தர் கல்யாண் அவரை அமருமாறு கேட்டுக் கொண்டார். இருப்பினும், கௌதம் தொடர்ந்து பேச முற்பட்டார். அப்போது சபாநாயகர், "இதற்கு மேல் நீங்கள் எதாவது கூற விரும்பினால், அதற்கான அறிவிப்பை கொடுங்கள். அதன்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறி அவரை தடுத்து நிறுத்தினார்.