அதானி குழுமம் உலகம் முழுவதும் போலியான தரவுகளை கொண்டு பல மோசடி செய்துள்ளதாக ஹிண்டென்பெர்க் வெளியிட்ட புகாருக்கு அதானி குழுமம் பதிலளித்துள்ளது.
அதானி குழுமம் கடந்த சில ஆண்டுகளில் உலக அளவில் பெரும் வளர்ச்சி பெற்று உலக பணக்காரர்களில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் அதானி குழுமத்தின் இந்த அசுர வளர்ச்சிக்கு அவர்கள் செய்த மோசடியே காரணம் என கூறி அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டென்பெர்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அதானி பங்குகள் வீழ்ச்சியை சந்தித்த நிலையில் இன்று அதானி குழுமம் பதில் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் “ஹிண்டென்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை இந்தியா மீது தொடுக்கப்பட்ட திட்டமிட்ட தாக்குதல்” என கூறியிருந்தது.
இந்நிலையில் அதானி குழும அறிக்கைக்கு பதில் அளித்துள்ள ஹிண்டென்பெர்க் நிறுவனம் “இந்தியா வேகமாக வளர்ந்து வரும் வல்லரசு. தேசியம் என்னும் போர்வையை போர்த்திக் கொண்டு மோசடி குற்றச்சாட்டுகளில் இருந்து அதானி குழுமம் தப்பிக்க நினைக்கிறது. அதானி குழுமம் இந்தியாவின் வளர்ச்சிக்கு தடையாக மாறியுள்ளது” என கூறியுள்ளது.
இந்நிலையில் அதானி குழும முறைகேடு குறித்த செபி விசாரணை தேவை என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.