கேரளத்தை சேர்ந்த இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரியும், தாத்ரா நகர் - ஹவேலி மாவட்ட முன்னாள் ஆட்சியருமான கண்ணன் கோபிநாதன், ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பொதுவாழ்வில் இணைந்துள்ளார். அவர் நேற்று டெல்லியில் காங்கிரஸ் கட்சியில் அதிகாரப்பூர்வமாக சேர்ந்தார்.
2018 கேரள வெள்ளத்தின்போது, ஒரு சாதாரண தன்னார்வலர் போல் மீட்பு பணிகளில் ஈடுபட்டு அவர் பிரபலமானார். 2019 நாடாளுமன்ற தேர்தலின்போது பாஜக ஆதரவு வேட்பாளருக்கு நோட்டீஸ் கொடுத்ததால், அவர் ஆட்சியர் பதவியிலிருந்து மாற்றப்பட்டார்.
அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம், காஷ்மீரில் 370 பிரிவை நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கருத்து சுதந்திரம் மறுக்கப்படுவதாகக் கூறியும் தனது 33 வயதில் ஐ.ஏ.எஸ். பதவியை ராஜிநாமா செய்தார்.
தற்போது, அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் முன்னிலையில் காங்கிரஸில் இணைந்த அவர், "பொதுமக்களை நோக்கி பயணிப்பதுதான் எனது லட்சியம்" என்று கூறினார். கேரள சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இவருக்கு எம்.எல்.ஏ. சீட் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.