எதிர்வரும் பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில், அசாதுதீன் ஓவைசி தலைமையிலான அனைத்து இந்திய மஜ்லிஸ்-இ-இட்டேஹதுல் முஸ்லிமீன் கட்சி, ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு சவால் அளிக்கும் வகையில், வலுவான 3வது அணியை அமைக்க தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.
நவம்பர் மாதம் இரு கட்டங்களாக நடைபெறவுள்ள இந்தத் தேர்தலில், AIMIM தனது பலத்தை காட்ட திட்டமிட்டுள்ளது. கடந்த தேர்தல்களைவிட 5 மடங்கு அதிகமாக, சுமார் 100 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
AIMIM கட்சி மதச்சார்பற்ற வாக்குகளை பிரிப்பதாக மகாகாத்பந்தன் கூட்டணி முன்பு குற்றம் சாட்டியது. இது குறித்து பேசிய பிகார் மாநிலத் தலைவர் அக்தருல் இமான், "கூட்டணி அமைப்பதற்காக RJD தலைவர்களுக்கு கடிதம் எழுதியும் பதில் வராததால், 3வது அணியை கட்டமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம். ஒத்த கருத்துடைய பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது" என்று தெரிவித்தார்.