ராஜஸ்தானில் உள்ள பழங்குடி இனத்தைச் சேர்ந்த கிறிஸ்துவ குடும்பங்கள் மீண்டும் இந்து மதத்திற்கு திரும்பியதை அடுத்து, அங்கு கட்டப்பட்டிருந்த சர்ச், ஹிந்து கடவுள் கோயிலாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பல ஆண்டுகளுக்கு முன்பு, கவுதம் கராசியா என்பவர் கிறிஸ்துவ மதத்திற்கு மாறியதோடு, ராஜஸ்தான் மாநிலத்தின் பன்ஸ்வாரா என்ற பகுதியில் ஒரு சர்ச் கட்டினார். இப்போது அவரே மீண்டும் இந்து மதத்துக்கு மாறி, அந்த சர்ச்சை கோவிலாக மாற்றியுள்ளார். அவர் அந்த கோவிலின் பூசாரியாகவும் மாறியுள்ளார்.
மேலும், அந்த கிராமத்தைச் சேர்ந்த பெரும்பாலான கிறிஸ்துவ குடும்பங்கள் விருப்பத்துடன் சொந்த மதத்திற்கு திரும்பியதாகவும், தேவாலயத்தை பைரவர் கோவிலாக மாற்ற ஒருமனதாக முடிவு செய்யப்பட்டதாகவும் கவுதம் தெரிவித்துள்ளார்.
இதுவரை சர்ச் கட்டிடத்திற்கு மஞ்சள் நிறம் பூசப்பட்டிருந்த நிலையில், தற்போது காவி வண்ணம் பூசப்பட்டுள்ளது. மேலும், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று பைரவர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும், அப்போது பொதுமக்கள் உணர்ச்சி மிகுந்த வகையில் "ஜெய் ஸ்ரீ ராம்" என கோஷம் எழுப்பியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.