ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு சம்பவத்தில் தமிழர்களை தொடர்புபடுத்தி தான் தெரிவித்த கருத்துகளுக்காக கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் ஷோபா மன்னிப்பு கோரினார்.
பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தமிழர்கள்தான் காரணம் என்று மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அவரது இந்த பேச்சுக்கு தமிழகத்திலிருந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.
அமைதி, நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய ஷோபா மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார்.
இந்நிலையில் ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு சம்பவத்தில் தமிழர்களை தொடர்புபடுத்தி தான் தெரிவித்த கருத்துகளுக்காக கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே மன்னிப்பு கோரியுள்ளார். தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தான் கூறிய கருத்துக்களையும் திரும்ப பெறுவதாக கூறியுள்ளார்.