மகாசிவராத்திரி தினத்தில் அசைவம் சாப்பிட்ட மாணவிகள்.. தலைமுடியை பிடித்து இழுத்த வலதுசாரி அமைப்பு..!

Siva
வியாழன், 27 பிப்ரவரி 2025 (08:11 IST)
மகா சிவராத்திரி தினத்தில் அசைவம் சாப்பிட்ட பல்கலைக்கழக  மாணவிகளின் தலைமுடியைப் பிடித்து வலதுசாரி மாணவர் அமைப்பு இழுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் செயல்பட்டு வரும் தெற்காசிய பல்கலைக்கழகத்தில் சில மாணவிகள் நேற்று அசைவம் சாப்பிட்டதாக தெரிகிறது. அப்போது, வலதுசாரி மாணவர் அமைப்பைச் சேர்ந்த சிலர் வந்து, "மகா சிவராத்திரி தினத்தில் அசைவம் சாப்பிடக்கூடாது. மீறி சாப்பிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரித்தனர்.

ஆனால், அதையும் மீறி அந்த மாணவிகள் அசைவம் சாப்பிட்ட போது திடீரென மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில், வலதுசாரி அமைப்பை சேர்ந்த மாணவர்கள், அசைவம் சாப்பிட்ட மாணவிகளின் தலைமுடியைப் பிடித்து இழுத்து வன்முறையில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதனை அடுத்து, சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து காவல் அதிகாரிகள் கூறியதாவது: "அசைவம் சாப்பிட்டதை வைத்து இரண்டு குழுக்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டது. இது குறித்து விசாரணை செய்து வருகிறோம். முறையான புகார் எதுவும் வரவில்லை. ஆனாலும், பல்கலைக்கழக நிர்வாகத்துடன் இணைந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என தெரிவித்தனர்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்