மத்திய கல்வி அமைச்சர் தலைமையில் நடைபெற்ற உயர்நிலைக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதில், சிபிஎஸ்சி, கேந்திரியா வித்யாலயா மற்றும் நவோதயா பள்ளிகளின் பாடத்திட்டம் கொண்ட பள்ளிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், உலகளாவிய பாடத்திட்டத்தை நிறுவுவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், 2026-27ஆம் கல்வியாண்டில் வெளிநாட்டு பள்ளிகளுக்கான உலகளாவிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தற்போது பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெறும் 10ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளை ஆண்டுக்கு இருமுறை நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இது, மாணவர்கள் இளங்கலை படிப்பில் சேருவதற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில் திட்டமிடப்பட்டிருப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக அடுத்த கல்வியாண்டு முதல், 10ஆம் வகுப்புக்கான இருமுறை பொதுத்தேர்வு நடைமுறைக்கு வரும். பிப்ரவரி-மார்சில் முதல் தேர்வு, மே மாதத்தில் இரண்டாவது தேர்வு நடைபெறும் என்றும், ஆனால் அதே நேரத்தில் செய்முறை தேர்வு ஒருமுறை மட்டுமே நடத்தப்படும் என சிபிஎஸ்சி அறிவித்துள்ளது.