சாட்ஜிபிடியில் பலரும் கிப்ளி செய்து விளையாடி வரும் நிலையில் ஏஐ ஆதார் கார்டையே உருவாக்கி தருவதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது சர்வமும் ஏஐ மயமாகிவிட்ட நிலையில் பல துறைகளிலும் ஏஐயின் தலையீடு, பயன்பாடு இருந்து வருகிறது. அதுதவிர எண்டெர்டெயின்மெண்ட் துறையிலும் ஏஐயின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. சமீபமாக பலரும் சாட்ஜிபிடியில் கிப்ளி ஸ்டைலில் தங்கள் புகைப்படங்களை மாற்றி ஷேர் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சாட்ஜிபிடி இந்தியர்களுக்கு வழங்கப்படும் ஆதார் அடையாள அட்டையையே தயாரித்து காட்டியதுதான் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதில் ஆதாரில் உள்ளது போல புகைப்படம், பெயர், ஆதார் எண் போன்றவையும் உள்ளன. ஆனால் இந்த எண், பெயரெல்லாம் சாட்ஜிபிடி ரேண்டமாக உருவாக்குவது என்றும், இவை உண்மையான ஆதார் அட்டையின் தகவல்களை கொண்டது அல்ல என்றும் ஏஐ நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆனால் பொதுவாக ஏஐ என்பவை பயிற்றுவிக்கப்பட்டவை. அப்படியாக இருப்பின் இதுபோல ஆதார் அட்டைகளில் இடம்பெறும் படங்களை உருவாக்க ஏற்கனவே பலர் கிப்ளி ஸ்டைல் போன்றவற்றிற்காக உள்ளீடு செய்த படங்களை ப்ராசஸ் செய்து இதை உருவாக்குகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் ஏற்கனவே ஆதார் தகவல்கள் டார்க் நெட் உள்ளிட்டவற்றில் லீக் ஆவதாக குற்றச்சாட்டு இருந்துவரும் நிலையில், சாட்ஜிபிடியும் கசிந்த ஆதார் டேட்டாக்களை கொண்டு ட்ரெயின் செய்யப்பட்டுள்ளதா என்ற கேள்வியும் எழாமல் இல்லை. இதுகுறித்து சமூக வலைதளங்களில் ஏஐ நிபுணர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
Edit by Prasanth.K