43 ஆண்டு கால வீர பயணம்: யார் இந்த ஜெனரல் பிபின் ராவத்??

Webdunia
புதன், 8 டிசம்பர் 2021 (19:03 IST)
நீலகிரி விமானப்படை ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் இந்தியாவின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழந்துள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இவர் தனது வாழ்வில் கடந்து வந்த பாதையின் விவரம் இதோ... 

 
பிபின் ராவத் கடந்த 1958 மார்ச், 16 அன்று உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள பவுரி டவுனில் பிறந்தவர். இவரது குடும்பம் இந்திய ராணுவத்தில் சேவையாற்றி வந்துள்ளது. டேராடூன் மற்றும் ஷிம்லாவில் பள்ளிக் கல்வியை முடித்து பின்னர் தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் இந்திய ராணுவ அகாடமியில் மேற்படிப்பு பயின்றவர். 
 
1978 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் டேராடூனில் உள்ள இந்திய ராணுவ பயிற்சி அகாடமியில் உள்ள பதினோராவது கூர்கா ரைஃபிள்ஸ் பிரிவின் ஐந்தாவது படையணியில் சேர்ந்தார். டேராடூனில் உள்ள இந்திய ராணுவ பயிற்சி நிலையத்தில் இந்திய ராணுவ இயக்குநரகத்தின் தலைமை அதிகாரி உட்பட பயிற்சி அளிக்கும் பொறுப்பை அவர் வகித்தார். 
மத்திய பிராந்தியத்தில் தளவாடங்கள் பிரிவு அலுவலராக அவர் பணியாற்றினார். ராணுவ செயலர் பிரிவில், துணை ராணுவ செயலாளர் மற்றும் கர்னல் அந்தஸ்தில் ராணுவ செயலாளராக பிபின் ராவத் பணியாற்றினார். யூரி, ஜம்மு & காஷ்மீர் ஆகிய பகுதிகளில் மேஜராகப் பணியாற்றியுள்ளார். ப்ரிகேடியராக பதவி உயர்வு பெற்றபிறகு, சர்வதேச படைப்பிரிவுக்குத் தலைமையேற்றுள்ளார். 
 
31 டிசம்பர், 2016 அன்று ராணுவ தலைமைத் தளபதியாகப் பதவியேற்றார். இதன்மூலம், கூர்கா படையிலிருந்து ராணுவ தலைமைத் தளபதியாகப் பதவியேற்ற மூன்று அதிகாரி என்ற பெருமையையும் பெற்றார். அதோடு, 2017-ம் ஆண்டிலிருந்து நேபாள் ராணுவத்தின் கௌரவத் தளபதியாகவும் இருந்து வருகிறார்.
 
தற்போது அவர் இறந்த குன்னூரில் உள்ள வெலிங்டனில் இந்தியாவின் முப்படை அதிகாரிகளின் கூட்டுப் பயிற்சி நிறுவனத்தில் பட்டம் பெற்றுள்ளார். இந்தியாவின் முதல் முப்படை தலைமைத் தளபதியாக ஜெனரல் பிபின் ராவத் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். 
அவருடைய 40 ஆண்டுகளுக்கும் மேலான ராணுவப் பணியில், பரம் விஷிஸ்ட் சேவா, உத்தம் யுத் சேவா, அதி விஷிஸ்ட் சேவா, யுத் சேவா, சேனா, விஷிஸ்ட் சேவா, சிறப்புச் சேவை விருது, ஆபரேஷன் பராக்ரம், சைன்ய சேவா உட்படப் பல பதக்கங்களைப் பெற்றுள்ளார்.
 
லெப்டினென்ட் (1980), கேப்டன் (1984), மேஜர் (1989), லெப்டினென்ட் காலனெல் (1998), காலனெல் (2003), ப்ரிகேடியர் (2007), மேஜர் ஜெனரல் (2010), லெப்டினென்ட் ஜெனரல் (2014), தலைமைத் தளபதி (2017), முப்படை தளபதி (2019) ஆக பதவி வகித்தார். ராணுவத்தில் பணியில் இருந்த போதே மரணம் அடைந்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்