ஆரம்ப சுகாதார மையங்களில் அவசர மருத்துவ வசதிகள் சரியாக இல்லாத காரணத்தினால் ஏற்படும் குழந்தைகளின் உயிரிழப்பை தடுக்க சிறப்பு ஆம்புலன்ஸ் சேவையை தொடங்க குஜராத் அரசு திட்டமிட்டுள்ளது.
குஜராத் அரசு, பிறக்கும் குழந்தைகளுக்கான ஆம்புலன்ஸ் சேவை என்ற பெயரில் சிரப்பு திட்டம் ஒன்றை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் குறித்து குஜராத் மாநில சுகாதார ஆணையர் மருத்துவர் ஜெயந்தி கூறியதாவது:-
பல குழந்தைகள் ஜாம்நகர் மாவட்ட சிவில் மருத்துவமனையில் இருந்து அவசர சிகிச்சைக்காக அகமதாபாத் மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்ல வேண்டி உள்ளது. பிறந்த குழந்தைகளை மருத்துவமனைகளுக்கு இடையே அழைத்து செல்ல அதிக நேரம் ஆவதால் அகமதாபாத் மருத்துவமனையை அடைவதற்குள்ளாகவே பல குழந்தைகள் இறந்துவிடுகின்றன.
எனவே, ஜாம்நகர் சிவில் மருத்துவமனை கண்காணிப்பாளர் ஒரு யோசனையை முன்வைத்தார் அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு ஜாம்நகர் சிவில் மருத்துவமனைக்கு மட்டும் சோதனை முயற்சியாக சிறப்பு ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது.
இதன்மூலம் 43 குழந்தைகளின் உயிரை காப்பாற்ற முடிந்தது. எனவே இத்திட்டத்தை விரிவு படுத்த ‘பிறக்கும் குழந்தைகளுக்கான ஆம்புலன்ஸ் சேவை’ எனும் பெயரில் மாநிலம் முழுதும் முதற்கட்டமாக அனைத்து சிறப்பு வசதிகளையும் கொண்ட 10 ஆம்புலன்ஸ்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.