சாமி கும்பிட வந்த முதலை – குஜராத்தில் ஆச்சர்ய சம்பவம்

Webdunia
திங்கள், 24 ஜூன் 2019 (12:27 IST)
குஜராத்தில் உள்ள கோவிலில் முதலை ஒன்று கோவில் கருவறை வரை சென்று சாமி கும்பிட்ட சம்பவம் அப்பகுதியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தில் பால்லா கிராமத்தில் உள்ளது கோடியர் கோவில். ”கோடியர் தேவி” எனப்படும் இந்து மத பெண் கடவுளின் கோவில் அது. முதலையை வாகனமாக கொண்ட கோடியர் தேவிக்கு வட இந்தியாவில் பல்வேறு இடங்களில் கோவில்கள் உள்ளன.

இந்நிலையில் நேற்று வழக்கம்போல கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் சென்ற போது 6 அடி நீளமுள்ள முதலை ஒன்று கருவறையில் படுத்து கிடந்தது. வந்தவர்களை பயமுறுத்தாமல், தாக்காமல் அமைதியாக கோடியர் தேவி சிலையை பார்த்தவாறு அது படுத்திருந்தது. இதை கண்டு ஆச்சர்யப்பட்டு போன பக்தர்கள் ஓடிப்போய் ஊருக்குள் இதை சொல்லியிருக்கிறார்கள். ஊர் மக்கள் கூடி வந்தும் முதலை பயப்படாமல் அமைதியாக அமர்ந்திருக்கிறது. கோடியர் தேவியை தரிசிக்க வந்த முதலையை மக்கள் மலர் தூவி வழிபட்டுள்ளனர். முதலையும் எந்த எதிர்ப்பும் காட்டாமல் அமைதியாக இருந்துள்ளது.

கோவிலுக்குள் முதலை இருக்கும் தகவல் மஹிசாகர் வனத்துறைக்கு தெரிந்ததும் அவர்கள் முதலையை பிடிக்க கோடியர் தேவி கோவிலுக்கு வந்துள்ளனர். மக்கள் அவர்கள் உள்ளே சென்று முதலையை பிடிக்கக்கூடாது என தடுத்து நிறுத்தினர். அவர்களுடைய தடையை மீறி உள்ளே புகுந்த வனத்துறையினர் முதலையை பிடிக்க முயன்றனர். கோபமான முதலை அவர்களை தன் வாலால் தாக்கியுள்ளது. பிறகு எப்படியோ சமாளித்து முதலையை பிடித்து விட்டனர்.

அதை கோவிலிலேயே விட சொல்லி பொது மக்கள் கேட்டும் அதற்கு வன துறை மறுப்பு தெரிவித்துவிட்டது. பிறகு ஒரு காட்டிலுள்ள ஒரு குட்டையில் அந்த முதலையை விட்டுவிட்டார்கள். கோடியர் தேவியை வழிபட முதலை வந்த சம்பவம் அப்பகுதியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்