பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லும்போது உயிர்த்தெழுந்த பிணம்:அதிர்ந்து போன மருத்துவர்கள்

சனி, 22 ஜூன் 2019 (18:20 IST)
மத்திய பிரதேசத்தில் பிரேத பரிசோதனைக்காக முதியவரைக் கொண்டு சென்ற போது, உயிர் பிழைத்ததால் மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

மத்திய பிரதேச மாநிலம், சாகர் மாவட்டத்தின் அரசு மருத்துவமனையில் காசிராம் என்ற 72 வயது முதியவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், காசிராம் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

பின்பு மறுநாள் காசிராமின் உடலை, மருத்துவர்கள் பிரேத பரிசோதனைக்காக ஆய்வுக் கூடத்திற்கு அனுப்பிவைத்தனர். ஆய்வுகூடத்திற்கு கொண்டு செல்லும் வழியில் காசிராமின் கால்கள் அசைந்துள்ளன.

இதனை கண்டு அதிர்ந்த மருத்துவமனை பிரேத பரிசோதனை ஆய்வுக் கூடத்தின் பணியாளர்கள், உடனே மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்பு ஆய்வு கூடத்திற்கு விரைந்து வந்த மருத்துவர்கள், காசிராமை பரிசோதித்து பார்த்து, காசிராம் உயிருடன் இருப்பதை அறிந்து அதிர்ந்து போயினர்.

 இதனை குறித்து மருத்துவமனை தலைமை மருத்துவர் ரோஷன், காசிராம் கடந்த 20 ஆம் தேதி இரவு 09.30 மணி அளவில் இறந்ததாகவும், அவர் உயிரோடு உள்ளது மறுநாள் தெரியவந்ததாகவும் கூறினார்.

மேலும் அவர், பணியில் அலட்சியமாக நடந்துகொண்ட மருத்துவர்கள் குறித்தும், அவர்களின் செயல்பாடுகள் குறித்தும் விசாரிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

உயிரிழந்தவர்க்கு மறுபடியும் உயிர் வந்த சம்பவம், சாகர் அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கும், உள் நோயாளிகளுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்