எல்லா கட்சிகளிலும் மாநிலங்களவை உறுப்பினர் இருக்கும் போது, நாங்கள் ஏன் இருக்கக் கூடாதா என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கேள்வி எழுப்பி உள்ளார்.
தேமுதிக கொடி நாளை ஒட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் அந்த கட்சியின் கொடியை திருமதி பிரேமலதா விஜயகாந்த் ஏற்றி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து, எங்களிடம் பேச வருபவர்களிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றார்.
அடுத்து நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பிறகுதான் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மாநிலங்களவை உறுப்பினர் பதவி குறித்து செய்தியாளர்களுக்கு எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த பிரேமலதா, எல்லா கட்சிகளிலும் மாநிலங்களவை உறுப்பினர் இருக்கும் போது, நாங்கள் ஏன் இருக்கக் கூடாதா என கேள்வி எழுப்பினார்.
கூட்டணி பேச்சு வார்த்தையின் போது எல்லா கட்சிகளும் மாநிலங்களை உறுப்பினர் பதவி கேட்கும் போது நாங்கள் ஏன் கேட்கக்கூடாது என்றும் திருமதி பிரேமலதா விஜயகாந்த் ஆவேசமாக கூறினார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளிடம் பேசிய பிரேமலதா, மக்களவைத் தேர்தலில் 14 தொகுதிகளும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் வழங்கும் கட்சியுடன்தான் கூட்டணி அமைக்கப்படும் என கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.