காட்டு விலங்குகள் நடமாட்டமுள்ள வனப்பகுதிகளை ஒட்டிய வாக்குச்சாவடிகளில் - வனத்துறையுடன் இணைந்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் - கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் கிராந்தி குமார் பாடி

J.Durai
வியாழன், 18 ஏப்ரல் 2024 (08:33 IST)
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரும் ,தேர்தல் அலுவலருமான கிராந்திகுமார் பாடி,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், மாநகர காவல் துணை ஆணையர் ஸ்டாலின் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். 
 
அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார்,
 
கோவை பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6:00 மணியுடன் ஓய்ந்தது.  வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து, இன்று கோவை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்தி குமார் பாடி செய்தியாளர்களை சந்தித்தார்.
 
கோவை மாவட்டத்தில் கோவை மற்றும் பொள்ளாச்சி என இரண்டு நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளதாக தெரிவித்த மாவட்ட தேர்தல்  அலுவலர், கோவை பாராளுமன்ற தொகுதியில் 21,06124 வாக்காளர்களும், பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் 1593168 வாக்காளர்களும் உள்ளதாக தெரிவித்தார்.
 
மாவட்டத்தில் மொத்தம் 3096 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் பணிபுரியும் அலுவலர்கள் நாளை பிற்பகல் முதலே அங்கு பணிக்கு செல்வர் என தெரிவித்தார். வாக்குப்பதிவு மையங்களில் பணி புரியும் அலுவலர்களுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறிய கிராந்தி குமார் பாடி, வாக்களிக்க வரும் பொது மக்களுக்கு காலநிலையை கருத்தில் கொண்டு குடிநீர், கழிவறை, சாமியான பந்தல் போன்ற அடிப்படை வசதிகள் அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார். வயதானவர்கள் மற்றும் உடல் ஊனமுற்றவர்கள் வாக்களிக்க வரும் சமயத்தில், அவர்களுக்கு சக்கர  நாற்காலிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். மலை பகுதி மற்றும் கேரள மாநில எல்லையை ஒட்டி கோவை மாவட்டம் அமைந்துள்ளதால் ,அங்கு அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஆதிவாசி மற்றும் மலைவாழ் மக்கள் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க ஏதுவாக, இம்முறை பேருந்து மற்றும் ஜீப் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கோவை, கேரள மாநில எல்லையில் நக்சல் நடமாட்டம் உள்ள பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் அமைந்துள்ள ஒன்பது வாக்குச்சா`வடிகளும் ,துணை ராணுவ படை மற்றும் சிறப்பு தேர்தல் பார்வையாளர்கள் கண்காணிப்பில் வாக்குப்பதிவு நடைபெறும் எனக் கூறினார். 
 
யானை போன்ற வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காட்டு விலங்குகள் வராதபடி வனத் துறையிடம் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். நூறு சதவீத  வாக்குப்பதிவு இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொண்டு, பல்வேறு தனியார் அமைப்புகளுடன் இணைந்து பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளதாக தெரிவித்தார்.
 
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், வெளியூர் ஆட்கள் யாரும் இன்று மாலை 6 மணிக்கு மேல் எங்கும் தங்கக் கூடாது என்பதை உறுதிப்படுத்த ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்களில் அறிவுறுத்தப்பட்டதுடன்,  சோதனைகள் நடத்தப்படும் என்றார். பதட்டமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ள மையங்களில், கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், தேவைக்கு ஏற்ப தயார் நிலையில் சிறப்பு அதிவிரைவு படை தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் என்றார்.
 
இதனை தொடர்ந்து பேசிய கோவை மாநகர காவல் துணை ஆணையர் ஸ்டாலின்,கோவை மாநகர பகுதிகளில் அமைந்துள்ள வாக்குச் சாவடிகளில் போதுமான அளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக  தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்