வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க முடியவில்லை என்று நடிகர் சூரி வேதனை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள், திரை பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் வாக்களிக்க முடியவில்லை என்று நடிகர் சூரி வீடியோ ஒன்றை வெளியிட்டு வேதனை தெரிவித்துள்ளார். வளசரவாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்களிப்பதற்காக நடிகர் சூரி தனது மனைவியுடன் சென்றார். அவரது மனைவி வாக்களித்து நிலையில் வாக்காளர் பட்டியலை சரிபார்த்த தேர்தல் அதிகாரிகள் அந்த பட்டியலில் நடிகர் சூரியின் பெயர் விடுபட்டிருப்பதாக தெரிவித்தனர்.
நடிகர் சூரியின் மனைவியின் பெயர் பட்டியலில் இடம் பெற்று இருக்கும் நிலையில் அவர் மட்டும் வாக்களிக்க தேர்தல் அதிகாரிகள் அனுமதித்த நிலையில் நடிகர் சூரியை வாக்களிக்க அனுமதிக்கவில்லை. இதனால் ஏமாற்றத்துடன் வாக்குச்சாவடியில் இருந்து வெளியே வந்த நடிகர் சூரி வீடியோ ஒன்றை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
அதில், 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்ற ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதற்காக தான் வாக்களிக்க வந்ததாகவும், ஆனால் வாக்காளர் பட்டியலில் இருந்து தனது பெயர் நீக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் தான் வாக்களிக்க முடியாமல் போனது வேதனையையும் ஏமாற்றத்தையும் அளிப்பதாகவும், கடந்த தேர்தல்களில் வாக்களித்து நிலையில் தற்போது ஏன் தனது பெயர் விட்டு போனது, இது யாருடைய தவறு என தெரியவில்லை என்று நடிகர் சூரி கேள்வி எழுப்பியுள்ளார்.
இருந்தபோதும் 100% வாக்குப்பதிவு நிறைவேற்ற முடியவில்லை ஜனநாயக கடமையை ஆற்ற முடியவில்லை என்ற வேதனையோடு இருந்தாலும் அனைவரும் வாக்களித்து 100% தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என அந்த வீடியோவில் நடிகர் சூரி கேட்டுக் கொண்டுள்ளார்.